11 May 2013

லேப்டாப் கவனம்

பொதுவாக லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படக் கூடிய வாழ்நாள், பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் சற்றுக் குறைவு என்றாலும், நாம் சற்றுக் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டால், அதன் வாழ்நாளை நீட்டித்து, அதிக பட்ச பயன்களை அடையலாம். கீழே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், லேப்டாப் கம்ப்யூட்டரை வேகமாக இயங்கச் செய்திடலாம்.
1. டிபிராக்: வாரம் ஒருமுறையேனும், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை டிபிராக் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் உங்கள் பைல்களை, ஹார்ட் டிஸ்க்கில் பதிகையில், அவற்றைப் பல துண்டுகளாக்கி, ஆங்காங்கே பதித்து வைக்கும். டிபிராக் செய்திடுகையில், இந்த துண்டுகள் அனைத்தையும், கம்ப்யூட்டர் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வைக்கிறது. இதனால், இந்த பைல்களைப் படிக்க லேப்டாப் அதிக சிரமப்படத் தேவை இல்லை. செயல்படும் நேரமும் குறையும்.


2. ரெஜிஸ்ட்ரி கிளீன்: விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படை கோப்பாக அமைவது ரெஜிஸ்ட்ரி. இதில் நாம் பதியும் புரோகிராம்களை இயக்குவதுகுறித்த குறியீடுகள் எழுதப்படும். இந்த புரோகிராம்களை எடுத்த பின்னரும், ரெஜிஸ்ட்ரியில் அந்த குறியீடுகளின் சில பகுதி தங்கிவிடும். இவையும் லேப்டாப் இயக்கத்தை மந்தப்படுத்தும். எனவே ரெஜிஸ்ட்ரியை அவ்வப்போது கிளீன் செய்திடும் புரோகிராம்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 
3. ஹார்ட் ட்ரைவின் சுமை: மியூசிக், பொழுதுபோக்கு, படங்கள், வீடியோக்கள் எனப் பலவகையான பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் நாம் குவித்துக் கொண்டே போவோம். அதே போல சிறிய புரோகிராம்களை, ஓரிரு முறை பயன்படுத்தவதற்காகப் பதிந்துவிட்டு நீக்காமலே இருப்போம். இவை எல்லாம் ஹார்ட் டிஸ்க்குக்குச் சுமையை அளிக்கும். டிஸ்க் இயங்கும் நேரத்தை நீட்டிக்கும். எனவே தேவையற்ற பைல்களையும், புரோகிராம்களையும் நீக்க வேண்டும். 
4. வைரஸ் பாதுகாப்பு: எந்த நேரமும், எவ்வழியிலும் வைரஸ் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் லேப்டாப்பிற்குள் நுழையலாம். எனவே வைரஸ்களிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றைக் கட்டாயம் நிறுவ வேண்டும். அதனை அவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும். அடிக்கடி முழுமையாக இயக்கிக் கம்ப்யூட்டரை சோதனை செய்திட வேண்டும். இதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் தாமாக இயங்கி, லேப்டாப்பினைச் சோதனை செய்திடும் வகையிலும் செட் செய்திடலாம்.
5. ரீசைக்கிள் பின்: நாம் நீக்கும் பைல்கள் ரீ சைக்கிள் பின்னில் தங்குகின்றன. நம்மை அறியாமல் அழித்துவிட்டால், பின்னர் மீண்டும் அவற்றைப் பெற்றுக் கொள்ள விண்டோஸ் இந்த ஏற்பாட்டினைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு பைல் அழிக்கப்பட்ட பின்னரும் தேவையா என்பதை நாம் உடனே அறிந்து கொள்ள முடியும். எனவே ரீசைக்கிள் பின்னில் உள்ள நீக்கப்பட்ட பைல்களை, அதிலிருந்தும் நீக்க வேண்டும்.
6. தற்காலிக இணைய பைல்கள்: இன்டர்நெட்டில் நாம் தளங்களைப் பார்க்கும்போது, அவை சார்ந்த பல பைல்கள், தற்காலிக பைல்களாக நம் லேப்டாப்பில் சேவ் செய்யப்படும். இவை அனைத்தையும் உடனுடக்குடன் நீக்க வேண்டும்.
7.தேவையற்ற ஸ்டார்ட் அப் புரோகிராம்கள்: கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போதே, சில புரோகிராம்கள் இயங்கத் தொடங்கும். நாளடைவில் நமக்குத் தேவைப்படாத, அல்லது சில நாட்கள் மட்டும் தேவைப்பட்ட புரோகிராம்களும் இயங்கியவாறே இருக்கும். இவற்றை நீக்குவது, கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வழி வகுக்கும்.
8. கூல் கூல்: உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரை, உங்கள் படுக்கை, சோபா, குஷன் ஆகியவற்றின் மீது வைத்து இயக்க வேண்டாம். லேப்டாப்பில் உருவாகும் வெப்பம் சுதந்திரமாக வெளியேற வேண்டும். இப்போது இதற்கெனவே சிறிய ஸ்டாண்டுகள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி, அதன் மீது வைத்துப் பயன்படுத்துவது, வெப்பத்தை வெளிச் செலுத்த உதவும். இதனால், லேப்டாப்பின் பாகங்கள் விரைவில் கெட்டுப் போவது தடுக்கப்படும்.



No comments:

Post a Comment